Thursday, August 29, 2013

தமிழ்நாடு - ஓர் அறிமுகம்



 தமிழ்நாடு (Tamil Nadu) இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராக சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கருநாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன.

தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், திராவிடக் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன

No comments:

Post a Comment