Friday, August 30, 2013

தமிழகம் - தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. உயர்ந்த இலக்கியம், இசை, நாடகம் போன்ற கலைகள் தமிழ் நாட்டின் பாரம்பரியம் மிக்க கலைகள் ஆகும். பரத நாட்டியம் எனும் நடனமும், தஞ்சை பாணி ஓவியங்களும், தமிழகக் கட்டடக் கலைகளும் இன்றளவும் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றுகின்ற கலை வெளிப்பாடுகளாக உள்ளன.
தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பாடே.
"தமிழர் பண்பாட்டின் அமைப்பொழுங்கானது அடிப்படையில் இரண்டு அம்சங்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: அதனளவில் சார்புடையது (culture dependent). மற்றறொன்று, உலகளாவிய அமைப்பியல்புகளோடு பொருந்தக்கூடியது (culture independent). அதாவது, தமிழ்ப் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய 'புறக் கூறுகள்' பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் 'அகக் கூறுகள்' உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறுவதும் இதன் உட்பொருளாகும்."
பாவாணர் கூறுவது போல , பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் , நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை . முன்னது 'அகக்கூறு ' பின்னது 'புறக்கூறு'. நாகரிகம் சேர்ந்த பண்பாடுண்டு , நாகரிகம் இல்லாத பண்பாடுமுண்டு . தமிழர் பண்பாடு இவிரண்டிலும் மெச்சத்தக்கது .
பல சந்தர்ப்பங்களில் தமிழர் பண்பாடு இது, தமிழர் பண்பாடு இதுவல்ல என்று தெளிவாக வரையறைப்பது கடினமாகினும் ஒரு அறிவுசார் மதிப்பீடு செய்யமுடியும். எடுத்துக்காட்டாக யூத சமயமோ, சீக்கிய சமயமோ தமிழர் பண்பாட்டு வட்டத்துக்குள் வரமாட்டாது, மாற்றாக சைவ சமயத்துக்கு தமிழர் பண்பாட்டுடன் ஒரு இறுகிய தொடர்பு உண்டு.

No comments:

Post a Comment