Thursday, August 29, 2013

தமிழகம் - புவியமைப்பு


தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதிமூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமானதுமான மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும்.

No comments:

Post a Comment