Friday, August 30, 2013

தமிழகம் - மொழியும் இலக்கியமும்

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும்.

திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை -(திருக்குறள் - 400)

தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது. பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன.

No comments:

Post a Comment